புதுடெல்லியில் இருந்து சிறிலங்காவின் சுதந்திரநாள் நிகழ்வில் பெருமளவு இராஜதந்திரிகள் வருகை.
சிறிலங்காவில் நாளை கொண்டாடப்படவுள்ள 63வது சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்க புதுடெல்லியைத் தளமாகக் கொண்டியங்கும் பெருமளவு தூதுவர்களும் இராஜதந்திரிகளும் நேற்று சிறிலங்கா வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரவில் நடைபெறுவுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்கும் தூதுவர்கள் இராஜதந்திரிகளுக்கான வசதிகளை சிறிலங்கா வெளிவிவிகார அமைச்சே செய்து கொடுக்கவுள்ளதாக வெளிவிவகாரச்செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். அதிகளவிலான தூதுவர்கள் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24ம் நாள் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், புதுடெல்லியைத் தளமாகக் கொண்டியங்கும் சுமார் 70 வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது அவர் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகளில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அனுராதபுர சம்புத்தத்துவ மாவத்தையில் நடைபெறும் சுதந்திர நாள் நிகழ்வுகளில் 2600 சிறிலங்காப் படையினர் பங்கேற்கும் பாரிய அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.














